No results found

    எது உயர்ந்த செல்வம்?


    உலகத்திலேயே பரம ஏழை யார் என்றால், பிறக்கும் குழந்தை என்று சொல்லலாம். இறந்த பின் மனிதர்களுக்குப் போர்த்துவதற்கு ஒரு துணியாவது கிடைக்கும். ஆனால் ஒட்டுத்துணியின்றி, ஒரு வாய் தண்ணீர், ஒரு கவளம் உணவிற்கு கூட நிச்சயமற்ற நிலையில் அடுத்தவரை எதிர்பார்த்து பிறக்கும் குழந்தையை, பரம ஏழை என்று சொல்வது மிகப்பொருத்தமாக இருக்கும். கருவறையில் இருக்கும் வரை உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்குப் பஞ்சமில்லை. உலகை எட்டிப்பார்த்தவுடன் தேவைக்கான முதல் முயற்சி அழுகையாக வெடிக்கிறது. பெற்றோரின் செல்வ நிலையைப் பொறுத்து குழந்தைகளின் தேவைகள் நிறைவேறுகின்றன.

    வளர, வளர பொருட்களின் மீதான ஆசையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. உணவு, உடை, இருப்பிடம் என்று ஆசைகளின் எல்லை விரிந்து கொண்டே போகிறது. இல்லாத ஒன்று கிடைத்தவுடன், அடுத்தற்கு மனம் ஆசைப்படுகிறது. அடுத்தடுத்து வாழ்க்கையின் உயரத்திற்கு செல்ல சிறகு முளைத்து ஆசை பறக்கிறது. அதிகம் ஆசைப்பட்டு, இருப்பதை இழப்பவர்களும் இருக்கிறார்கள். ‘போதும்’ என்ற தன்னிறைவு அடைபவர்களும் சொற்ப எண்ணிக்கையிலேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வயிறார உண்டதில்லை”.

    மாநபி (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் வசதியான வாழ்க்கையுடன் மகிழ்ச்சியாக தங்கள் நாட்களைக் கழித்திருக்கலாம். ஆட்சி, அதிகாரம் அவர்கள் வசம் இருந்தும் அடுத்த வேளை உணவுக்காகக் கூட எதையும் சேமித்து வைத்திருக்கவில்லை. இன்னும் ஸஹாபாக்களும், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அதிகாரத்தில் இருந்த கலீபாக்களும் கூட தங்களுக்காகவோ, தங்கள் சந்ததியினருக்காகவோ எதுவும் சேர்த்து வைக்காமல் இப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்துள்ளார்கள் என்பதை நாம் ஹதீதுகளில் இருந்தும், வரலாற்று நிகழ்வுகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

    ஆனால், நாம் எதிர்காலத்தைப் பற்றி வீணாகக்கவலைப்படுகிறோம். நமக்காகவும், நம் சந்ததியர்களுக்காகவும் சேர்த்து வைக்க ஆசைப்படுகிறோம். நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் அவன் மூன்றாவதையும் தேடுவான்”. இவ்வுலகில் என் வீடு, என் துணை, என் பிள்ளைகள், என் சம்பாத்தியம் என்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் நினைத்துக் கொள்கிறோம், வாய்க்கு வாய் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், நமக்கே நமக்கானது என்று இவ்வுலகில் எதுவுமில்லை என்பதை நாம் மறந்து விடுகிறோம். இன்னும், என்னுடைய உழைப்பு, என்னுடைய முயற்சி, அதனால் எனக்குக் கிடைத்த வெற்றி என்று, இறைவனின் அருட்கொடை நினைவிற்கு வரும் வரையில் மனம் மமதை கொள்கிறது. மனிதர்களின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.

    உடல், உயிர் தந்தவன் அந்த வல்ல நாயனே. இன்னும் உறவுகள், செல்வம், ஆரோக்கியம் எல்லாமே அவன் நாடியிருக்காவிட்டால் நமக்கு கிடைத்திருக்காது என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய வாழ்வாதாரத்தை விரிவாக்கித் தர இறைவனை வேண்டலாம். திருமறையில் இறைவன் கூறுகிறான்: “உங்களுக்கு நாம் அளித்திருப்பதில் இருந்து (நல்ல வழியில்) செலவு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:254) பொருட்செல்வம் தான் உயர்ந்த செல்வம் என்று நினைப்பவர்கள், பணம் படைத்தவர்களே செல்வாக்குடன் இருப்பதாகவும், சமுதாயம் அவர்களுக்கே மதிப்பும், மரியாதையும் தருவதாகவும் கருதுகிறார்கள். எனவே செல்வத்தைப் பெருக்குவதற்காக ஆலாய்ப் பறக்கிறார்கள். ஒருவர் எவ்வளவுதான் செல்வம் சேர்த்தாலும் அவர் உயிருடன் இருந்த போது செய்த நல்லறங்கள் மட்டுமே அவர் இறந்த பிறகு அவருடன் செல்லும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: “ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்”. அத்தியாவசியமான தேவைகளுக்கு அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல், தேவையுள்ள மனிதர்களுக்கு தங்களால் முடிந்த சிறு, சிறு உதவிகளை செய்வதற்கு பொருளாதாரம் தேவைதான். அதற்காக பொருளீட்டுவதில் தவறொன்றும் இல்லை. தேவைக்கும் அதிகமாக பெரும் செல்வத்தை சேர்ப்பதால் பிரச்சினைகளும் அதிகமாகின்றன. யாரெல்லாம் தம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து தங்கள் நிலைமை எவ்வளவோ மேல் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் தங்களைவிட மேலான நிலையில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, பொறாமையும் கொள்வதில்லை. தங்களுக்கு கிடைத்திருப்பவைகளைக் கொண்டு தங்களைப் படைத்த இறைவன் மீது திருப்தி கொள்கிறார்கள். குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் அன்புடன் நடந்து கொள்கின்றனர். ‘ஆசையே எல்லாத் துன்பத்திற்கும் காரணம்’ என்றார் புத்தர். ஆனால் இன்று பல பேர் பேராசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதிக பணம், மற்றவர்களின் மீதான கருணையையும், இரக்கத்தையும் வற்றச் செய்துவிடும். தந்தை சேர்த்து வைத்துள்ள சொத்தின் மீது முழு உரிமையைக் கோருபவர்கள், அதன் காரணமாக கோபமும், பகை உணர்ச்சியும் கொண்டு ரத்த உறவுகளைத் துண்டித்து வாழ்கிறார்கள். லட்சங்கள், கோடிகள் செலவழித்து தங்கள் குடும்பத் திருமணத்தை நடத்துபவர்கள், சாப்பாடும், தண்ணீரும் வீணாகப் போவதைப் பற்றி யோசிக்காதவர்கள், திருமண உதவி கேட்டு வரும் ஏழைகளுக்கு கொடுப்பதற்கு ரொம்பவே யோசித்து ஐநூறு, ஆயிரம் என்று கொடுப்பதைப் பார்க்கிறோம். பணத்தின் மீதான பேராசையால் மதியிழந்து கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடிய மனிதர்களைப் பற்றிய செய்திகளை அடிக்கடி செய்தித் தாள்களில் வாசிக்கிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள், பெண்கள் என்று விதி விலக்கில்லாமல் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பணத்தின் மீது ஏற்படும் பேராசை பொறாமையை உள்ளத்தில் உருவாக்கி விடுகிறது. நல்லெண்ணங்களை மறையச் செய்து விடுகிறது. நன்றாக வாழ்பவர்களைப் பார்த்து காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்பையும் தூண்டி விடுகிறது. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்பதை சித்தாந்தமாகக் கொண்டவர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. உயர்ந்த பண்புகள், நமக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடிய உறவினர்கள், நண்பர்கள், கர்வம் தராத கல்வி, ஒழுக்கமான குழந்தைகள் ஆகியவையே உயர்ந்த செல்வமாகப் போற்றத்தகுந்தது. என்றும் அழியாத இச்செல்வங்களே, நம் இறப்பிற்குப் பின்னும் நம்மைத் தொடரக் கூடியவை. இன்னும் நம்மைப் படைத்த இறைவனிடம் அளப்பரிய கூலியை நமக்குப் பெற்றுத் தருபவை, இன்ஷாஅல்லாஹ். 

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம்,

    Previous Next

    نموذج الاتصال