No results found

    இறையச்சம் தந்த இறைவசனம்


    இஸ்லாத்தின் சுடர் ஒளி அரபு பாலைவனத்திலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரகாசிக்கத் தொடங்கிய காலம். ஏக இறைவன் அல்லாஹ், தனது தூதராக முகம்மது நபி (ஸல்) அவர்களை தேர்ந்து எடுத்து, அவர்களுக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் திருக்குர்ஆன் வசனங்களை அறிவித்து வந்தான். எந்த அளவிற்கு இஸ்லாம் பரவியதோ, அந்த அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது. எனவே, இருட்டிய பின்னர் தோழர்களை சந்தித்து திருக்குர்ஆன் வசனங்களை நபிகளார் தெரிவித்து வந்தார்கள். ‘எத்தனை நாள் தான் பயந்து பயந்து கொள்கை விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருப்பது இதற்கு ஒரு விடிவுகாலம் வராதா?’ என்று நபிகளார் ஏங்கினார்கள். இதையடுத்து அவர்கள் ஏக இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

    “இறைவா, இஸ்லாமிய கொள்கை களுக்கு கடும் எதிர்ப்புகள் உள்ளன. இஸ்லாமிய கொள்கையை மக்களிடம் எடுத்துச்சொல்ல பலம் பொருந்தியவர்களை தந்தருள்வாயாக. உனக்கு பிரியமானவர்களில் அபூஜஹில் அல்லது உமர் இப்னு கத்தாப் ஆகிய இருவீரர்களில் ஒருவரைக் கொண்டு இஸ்லாத்தைப் பலப்படுத்துவாயாக”. இவ்வாறு மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் நபிகளார். அதேநேரத்தில் நபிகளாருக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை குரைஷித் தலைவர்கள் தீட்டினார்கள். அவர்கள் தங்களுடன் இருந்த உமர் அவர்களை நபிகளாருக்கு எதிராக தூண்டிவிட்டார்கள். ‘முஹம்மது என்பவரின் தலையைக் கொய்து வாருங்கள், ஏழுவெள்ளை ஒட்டகங்களை பரிசாக தருகிறோம்’ என்று உசுப்பேற்றினார்கள்.

    “அமைதியின் உருவமான, சாந்தமான ஒருவரை கொல்வதற்கு இத்தனை உயர்ந்த பரிசா?” என்ற உமர், ‘இதோ, உடனே அவர் தலையை கொய்துவருகிறேன்’ என்று புறப்பட்டு விட்டார்கள். வழியில் உமரை சந்தித்த ஒருவர், ‘உங்கள் தங்கை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த உமர் தன் தங்கை பாத்திமாவின் வீடு நோக்கிசென்றார். வீட்டுக்குள் இருந்த உமரின் தங்கை அப்போது திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்கொண்டு இருந்தார். இதை கேட்ட உமர் கோபத்துடன் வீட்டுக்குள் புகுந்து, தங்கையை கண்டித்தார். தங்கையோ தமயனின் அந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சவே இல்லை. ‘எங்கள் நாயகம் எங்களுக்கு நல்லவைகளை எடுத்துச் சொல்கிறார். நன்னடத்தையின் பக்கமும், நற்குணத்தின் பக்கமும் எங்களை வழிநடத்திச் செல் கிறார். எனவே அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை உமக்கு பயந்து விடுவதாயில்லை’ என்று தைரியமாக எதிர்க்குரல் எழுப்பினார்கள்.

    தங்கையின் குரலில் இருந்த உண்மையும், தைரியமும் உமரின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘அப்படி உங்கள் முஹம்மது என்ன சொல்கிறார்?’ என்று வினவினார்கள். தங்கை பாத்திமா, திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டினார். “நபியே! நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்த குர்ஆனை நான் உங்கள் மீது இறக்கவில்லை. இறைவனுக்கு அஞ்சக்கூடிய இறையச்சம் உடையவர்களும் ஓர் நல் உபதேசமாகவே இதனை இறக்கி வைத்தோம். உயர்ந்த வானங்களையும் பரந்த பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது” (திருக்குர்ஆன் 20:2-4). இந்த வசனத்தை தொடர்ந்து இஸ்லாமிய நன்னெறிகளைச் சொல்லும் பல திருக்குர்ஆன் வசனங்களை தன் தமயனுக்கு தொடர்ந்து ஓதிக்காட்டினார் பாத்திமா.

    இதைக்கேட்டதும் உமர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். ‘இது சத்தியம் நிறைந்த வார்த்தைகள். இது நிச்சயமாக இறைவனிடம் இருந்தே வந்திருக்க வேண்டும்’ என்று சொல்லிய உமர் கண்களில்இருந்து தாரை தாரையாக கண்ணீர்வழிந் தோடியது. “இப்போதே பெருமானாரிடம் சென்று என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறேன்” என்று கூறியபடி மீண்டும் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். உமர் உருவிய வாளுடன் வருவதை அறிந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஓடோடிச்சென்று “எம் பெருமானே, குரைஷித் தலைவர்களின் தூண்டுதலினால் உங்களை கொல்வதற்காக உருவிய வாளுடன் உமர் வந்து கொண்டிருக்கிறார்” என்று எச்சரித்தார், ஆனால் நடந்ததோ அல்லாஹ்வின் நாட்டப்படி வேறாக அமைந்தது. உருவிய வாளுடன் வேகமாக வந்த உமர், நபிகளாரை நெருங்கி, “அண்ணலே! உங்களைப் பற்றிய தவறான தகவல்களே இதுவரை எனக்கு தரப்பட்டது. என் தங்கை ஓதிக்காட்டிய இறை வசனத்தின் உண்மைகள் என் இதயத்தை ஊடுருவி விட்டன. நிச்சயமாக அவை இறைவன் வாக்காகவே இருக்க முடியும். அதை எந்த ஒரு மனிதரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எனவே உங்களைப் பின்பற்றியவரோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்று நபிகளின் கரங் களைப்பற்றி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார். இதன் மூலம் நபிகளாரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மறுகணமே, “இந்த சத்திய மார்க்கம் இன்னும் ஏன் இருட்டிலே உலா வர வேண்டும். தோழர்களே உண்மையை பகிரங்கமாக எடுத்துச் சொல்லுங்கள். எதிர்ப்பவர்களுக்கு பதிலாய் நான் அமைவேன்” என்று வீரத்துடன் முழங்கினார் உமர் இப்னு கத்தாப் (ரலி). வெட்டி வர அனுப்பிய உமர், வெற்றியின் பக்கம் இணைந்து விட்டாரே என்று குரைஷியர்கள் கவலை கொண்டார்கள். உமர் மூலம் ஏற்பட்ட பின்னடைவுக்கு பதிலாக மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில், உமர் மதம் மாறி விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல் அரபு கண்டத்தை ஆக்கிரமித்த போது, உமர் (ரலி) இவ்வாறு கூறினார்: “மதம் மாறவில்லை இந்த உமர், அறியா பாதையில் உழன்றுகொண்டிருந்த உமர் அறிவு ஞானத்தை தெரிந்து கொண்டார். ஓரிறையை ஏற்றுக்கொண்ட உமர் இறைத்தூதரையும் உண்மைப்படுத்தினார்”. அன்று முதல் இஸ்லாம் பகிரங்கமாக பரவத்தொடங்கியது. சுபீட்சம் என்னும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை விரிக்கத் தொடங்கினான். இருண்ட அரபு கண்டத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. வான்மறையின் வசனங்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். வாழ்வில் அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டுவோம். 

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.

    Previous Next

    نموذج الاتصال