No results found

    சமநிலை சமுதாயம்


    முஸ்லிமாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை கடமைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானதுதான் மனிதப் படைப்பின் நோக்கத்தை அடுத்தவருக்கும் எடுத்துச் சொல்வது.

    ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு கதாபாத்திரமாக அல்லாஹ் படைத்துள்ளான். மனிதனும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப செயல்படுகிறான். உதாரணமாக: அப்பா, அம்மா, குழந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி என்று அவரவர்கள் தங்களது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றுகின்றனர். அதேவேளை இந்தக் கதாபாத்திரங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிமுறையையும் இறைவன் மிகத்தெளிவாக வரையறை செய்துள்ளான்.

    அந்த வழிகாட்டும் முறை இன்று நேற்று தொடங்கியதல்ல. மாறாக, முதல் மனிதர் ஆதம் (அலை) எப்போது இந்த பூமிக்கு வந்தாரோ அன்று முதல் இந்த வழிகாட்டுதலும் கூடவே வந்துவிட்டது. மனிதர்களை படைத்தது ஏன் என்ற காரணத்தை பின்வருமாறு இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகிறான்: "நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை". (திருக்குர்ஆன் 51:56) உலகில் வாழும் மனிதர் அனைவரும் தங்களைப் படைத்த இறைவனை வணங்க வேண்டும், அவனுக்கு மட்டுமே கீழ்படிந்து நடக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கித்தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடைபோட வேண்டும் என்று இறைவன் விரும்புகின்றான்.

    எல்லா கால கட்டங்களிலும் இறை வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட மனிதர்களும் வாழ்வார்கள். ஏற்றுக்கொள்ளாத மனிதர்களும் வாழ்வார்கள். ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளாத மனிதர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்பது இறைவனின் கட்டளை. அதற்காகத்தான் இறைத்தூதர்கள் வருகை புரிந்தனர். இந்தப் பணியில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆயினும் மனம் தளராமல் இந்தப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த சீர்திருத்தத்தின் காரணத்தால்தான் இன்று உலகில் பலகோடி பேர் இறைநம்பிக்கையாளர்களாக திகழ்கின்றனர். இப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இல்லை. எனில் அந்தப் பணியை செய்வது யார்? அந்த இறைத்தூதரை ஏற்று வாழும் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளர்கள் மீதும் இது அடிப்படை கடமையாகும். இறுதி இறைத்தூதரை ஏற்றுக்கொண்ட மக்களை அருள்மறை குர்ஆனில் இறைவன் சிலாகித்துக் கூறுகின்றான். சிறந்த சமுதாயத்தினர் என்று புகழாரம் சூட்டுகின்றான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற பணியை இனிமேல் செய்யவேண்டியது பொறுப்பு அவர்களைச் சாரும் என்ற காரணத்தால் மட்டுமே அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்றும் கூறுகின்றான்.

    அல்லாஹ் கூறுகின்றான்: "மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் 'உம்மத்தன் வஸத்தன்' (சமநிலையுடைய சமுதாயமாக) ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக". (திருக்குர்ஆன் 2:143) எனவே முஸ்லிமாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை கடமைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானதுதான் மனிதப் படைப்பின் நோக்கத்தை அடுத்தவருக்கும் எடுத்துச் சொல்வது. இங்கே இன்னொன்றையும் நினைவில் இருத்த வேண்டும். என்னவென்றால், இந்தக் கடமையில் நாம் தவறும் பட்சத்தில் மறுமையில் இதற்காக இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதையும் மறந்துவிடலாகாது. சொல்லாலும் செயலாலும் ஏனையோருக்கு சான்று பகர்வோராக மாறும்போதுதான் நாம் முழுமையான முஸ்லிமாக மாறுகிறோம். அப்போதுதான் இறைவனின் கூற்றுப்படி நாமும் சிறந்த சமூகமாகத் திகழ முடியும்.

    Previous Next

    نموذج الاتصال